ஒன்று
சேர்ந்து பயணம் செய்யுங்கள்,
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்,
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்!
முன்பு தேவர்கள்
ஒன்றாக அவி பங்கிட்டதுபோல
ஒன்றுகூடி சிந்தியுங்கள்,
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்!
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றேயாகட்டும்!
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக!
உங்கள் மனங்கள் இணைவதாக!
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்!
ஓம் ஓம் ஓம்.
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்,
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்!
முன்பு தேவர்கள்
ஒன்றாக அவி பங்கிட்டதுபோல
ஒன்றுகூடி சிந்தியுங்கள்,
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்!
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றேயாகட்டும்!
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக!
உங்கள் மனங்கள் இணைவதாக!
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்!
ஓம் ஓம் ஓம்.
*
2011 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக ஊட்டி
காவிய முகாம் பற்றி அறிய நேர்ந்தது. சென்ற வருடம் அது நடைபெற்ற நாள்களில் எனக்கு
பெங்களூரில் இருந்தாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் பங்கு பெறுவது பற்றி யோசிக்க
முடியவில்லை. போய் வந்தவர்கள் சிலரிடம் விசாரித்ததில் ஒரு நல்ல அனுபவத்தை
இழந்துவிட்டோம் என்று தெரியவந்தது. 2012-இல் எப்படியும் பங்குகொள்வது என்று
அப்போதே முடிவு செய்திருந்தேன்.
முகாமில் நடந்த அனைத்தையும் எழுத்தில்
கொண்டுவருவது எனக்குக் கடினமான விஷயம். நான் இங்கு எழுதியுள்ளதை விடப் பன்மடங்கு
சிறப்புமிக்க ஒன்றாக முகாம் இருந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
*
ஏன் முகாம் என்பதற்கான விடை மேலேயுள்ள
ரிக் வேத மந்திரத்தில் இருக்கிறது. ஏன் ஊட்டி, ஏன் நாராயண குருகுலம் போன்ற
வினாக்களுக்கு விடையளிப்பது கொஞ்சம் கடினம். இவை ஒருவர் நேரடி அனுபவத்தால் அறிந்து
கொள்ளவேண்டிய விஷயங்கள். இருந்தாலும் கட்டுரையின் கடைசிப் பகுதியில் விடையளிக்க
முயன்றிருக்கிறேன்.
*
சுவாமி வியாச பிரசாத் வாழ்த்துரைகள்
வழங்கி விழாவைத் துவக்கி வைத்தார். முன்னதாக ஜெமோ இந்த முகாம் பற்றிப் பேசியபோது ‘இது இருபத்திரண்டு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று
வரும் ஒரு நிகழ்வு’ என்று
குறிப்பிட்டார். எனக்கு பிரமிப்பாக இருந்தது. திரு. சுரேஷ் அவர்கள் முருகன்
குறித்த ஒரு பக்திப் பாடலின் சில அடிகளைப் பாடியபின் திரு. நாஞ்சில் நாடன்
அயோத்தியா காண்டத்தில் இருந்து தேர்ந்தெடுத்த சில பாடல்களின் மீதான உரையை
ஆரம்பித்தார். அப்படித்தான் நினைத்தேன். நடந்ததோ வேறு!
அது உரையாக இல்லாமல் கலந்துரையாடலாகவே
இருந்தது. ஜடாயு பேசியபோதும் இது தொடர்ந்தது. பின்னர் எல்லா அமர்வுகளும் இதே format – ஐக் கொண்டிருந்தன. அயோத்தியா காண்டம் மீதான கலந்துரையாடலின் சில சுவாரஸ்யமான
தருணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
குகப் படலத்தில் பரதனின் தோற்றத்தைக்
காணுமுன் ‘பெரிய யானைப் படை வந்தாலும் எதிர்த்து நிற்பேன்’ என்று குகன் எண்ணுவதாக வருகிறது (...வேழ நெடும்படை
கண்டு விலங்கிடும் வில்லாளோ...). ஆனால் பரதனின் தோற்றம் கண்டபின் முற்றாக
மாறிவிடுகிறான்.
வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியென்ன நகையிழந்த
முகத்தானைக்
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின் றிடைவீழ விம்முற்று
நின்று(ஒ)ளிந்தான்.
இது குறித்துக் கதாகாலட்சேபம்
செய்யும்போது சொல்வார்களாம். பெரிய யானைப் படை வந்தாலும் எதிர்ப்பேன் என்று
எண்ணும் குகனை வீழ்த்த மூன்றே யானைகள் போதுமாம். அவை வற்கலையி னுடையானை, மாசடைந்த
மெய்யானை, நகையிழந்த முகத்தானை ஆகியவை!
‘மாசடைந்த மெய்யானை’ என்று குறிப்பதில் இன்னொரு நயமும் இருக்கிறது. அவன்
உடல் மாசுற்றிருக்கிறது. உள்ளம் தூய்மையாக இருக்கிறது. இதே போல தசரதன் கைகேயியிடம்
மன்றாடும்போது நாட்டை வேண்டுமானால் எடுத்துக்கொள், ராமன் காட்டுக்குப் போக வேண்டாம் என்று வேண்டுவார். அதை ‘மற்றதொன்றும் மறந்திடு...’ என்று பொருள்படும்படி கம்பர் பாடிச்
செல்கிறார். ராமர் காட்டிற்குப் போகவேண்டும் என்பதைச் சொல்லக்கூட தசரதனால்
முடியவில்லை.
மேலே சொன்ன இரண்டும் ஜடாயு கூறியவை.
கம்பராமாயணப் பாடல்களைக் காட்சிகளாக
மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தால் மட்டுமே அவற்றின் நயம் நமக்கு விளங்கும். அவ்வாறு
செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தனிமையில் படிக்கும்போது மிகக் குறைவு. உதாரணமாக
மந்திரப் படலத்தில் தசரதன் ராமனுக்கு முடிசூட்டுவது குறித்து மந்திரிமார்களிடம்
ஆலோசனை கேட்டதும் அவர்கள் ஒரே நேரத்தில் அதுகுறித்து மகிழ்ச்சியும் (ராமனுக்கு முடிசூட்டுதல்)
துயரமும் (தசரதன் இனி மன்னன் இல்லை என்பதால்) துயரமும் அடைகின்றனர். அதை ‘இரண்டு கன்றினுக் கிரங்குமோ ராவென விருந்தார்’ என்று கம்பர் வருணிக்கிறார். முகாமில் இதை
விளக்கியபோது எல்லோருமே அந்தக் காட்சியை மனக்கண்ணில் ஓட்டிப் பார்க்க முடிந்தது.
போலவே ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று சீதை சொல்லுமிடம், பட்டாபிஷேகம் காண வரும் மக்கள் கூட்டம் பற்றிய இடம்
(அவர்களுள் வேந்தரே அதிகம், வீரர்களே அதிகம், ஆண்களே அதிகம், பெண்களே அதிகம்,
இதுவரை வந்த கூட்டமே அதிகம், இனி வரவேண்டிய கூட்டமே அதிகம் என்ற பொருள்படும்படி
வருவது), பின்னர் ராமன் காட்டிற்குச் செல்லவேண்டி வந்தது தெரிந்ததும் ஊரின் நிலை (‘ஆவும் அழுத அதன் கன்றும் அழுத’ எனத் தொடங்கும் பாடல்) என்று வருமிடம் போன்ற எல்லாக்
காட்சிகளையும் கம்பன் காட்டுமளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்காவது visualaise
செய்து பார்த்துக்கொள்ள முடிந்தது.
அமலை என்றொரு ஆட்டம். போர் முடிந்த பிறகு
வென்றது யார் என்று தெரிந்த நிலை ஆனால் இன்னும் முடிவு அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்படவில்லை. அப்போது வீரர்கள் ஆடும் ஆட்டத்திற்குப் பெயர் அமலை. இதைத்
தெளிவுற விளக்கிப் பட்டாபிஷேகத்திற்கு முன்பான கொண்டாட்டங்களை அதனுடன் ஒப்பிட்டு
நாஞ்சில் நாடன் கூறிய கருத்துகள் ஒரு புது திறப்பு. மேலும் திவ்யப் பிரபந்தத்தில்
700 பாடல்கள் ராமாயணம் தொடர்பானவை என்பதையும் பகிர்ந்துகொண்டார்.
ஜடாயு பேசியபோது குலசேகராழ்வாரின்
தனித்துவம் பற்றிப் பேசினார். தேவகியாகத் தன்னை உருவகித்துக் கொண்டு ‘நான் உன்னைச் சீராட்டவில்லையே’ என்று கண்ணன் குறித்த பாடல்கள் இருப்பதாகவும்
தசரதனாகத் தன்னை எண்ணிக்கொண்டு புலம்புவது போல அமைந்த பாடல்கள் குறித்தும்
கூறினார்.
கம்பராமாயண அமர்வுகளின் சிறப்பம்சமாக நான்
கருதுவது ஒருவரையொருவர் இட்டு நிரப்பிய விதம்தான். ஜெமோ, நாஞ்சிலார், சுசீலா
மேடம், ஜடாயு, மேலும் பங்குபெற்ற அனைவரும் தாம் அறிந்த விஷயங்களைப்
பகிர்ந்துகொண்டனர். நாஞ்சிலார் பேசும்போது ஜடாயுவும், ஜடாயு பேசும்போது
நாஞ்சிலாரும் மேலும் பல பொருத்தமான பாடல்களை நினைவு கூர்ந்தனர். ஒரு சிறிய உதாரணம்
சொல்கிறேன். கைகேயியின் வரங்கள், அதன் பின் மன்னனின் முடிவு குறித்து வெகுண்டெழும்
இலக்குவனை ராமனால் சமாதானப் படுத்த முடிவதேயில்லை. நதியின் பிழையன்று நறும்புனல்
இன்மை... விதியின் பிழை நீ இதற்கு வெகுண்டதேன்...’ என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறான். இலக்குவன் அதுதான் விதியாயின் ‘...விதிக்கும் விதியாகும் என் வில்தொழில்...’ என்கிறான். கடைசியாக
நன்சொல் கடந்தாண்(டு) எனைநாளும் வளர்த்த
தாதை
தன்சொல் கடந் தெற் கரசாள்வது தக்க
தென்றால்
என்சொல் கடந்தாலுனக்கியாதுள தீன மென்றான்
தென்சொல் கடந்தான் வடசொல்கலைக் கெல்லை
தேர்ந்தான்.
மேலேயுள்ள பாடலில் ‘என் தந்தை சொல் கேட்பதென்பது எனக்கு தருமம். உனக்கு
என் சொல் கேட்பது என்பது தருமமில்லை. மீறுவதால் தவறில்லை’ என்ற பொருள் தொனிக்கும்படி நிஷ்டூரமாக ராமன்
கூறுகிறான். இவ்வாறு கூறியதும் இலக்குவன் சமாதானமடைகிறான். தமிழ் (தென்சொல்),
வடமொழி (வடசொல்) இரண்டிலும் ராமனுக்கு இருக்கும் புலமையைக் கம்பர் இங்கே
வெளிப்படுத்துகிறார்!
இவை போக பிற இலக்கியங்களில் இருந்து cross
reference – களும் செய்யப்பட்டன. வால்மீகி versus கம்பன்
என்ற கோணத்தில் கருத்துகள் பகிரப்பட்டன. சில பாடல்களை ஜடாயு சந்தத்துடன் பாடிக்
காட்டினார்.
மனப்பாடப் பாடல் பகுதிகளைத் தவிர மற்ற
வகையில் கம்பராமாயணம் படிதிருக்காத எனக்குத் தனிப்பட்ட முறையில் குகப் படலம்
நிறையப் பிடித்திருந்தது. பரதனைப் பற்றி ‘இவன் ஆயிரம் ராமனுக்குச் சமம்’ என்று குகன் எண்ணுமிடத்திலும், ‘ராமனின் இளவல்கள் தீயோர் ஆகார்’ என்று எண்ணுமிடத்திலும் மானசீகமாகக் கம்பனின் காலில்
விழுந்து எழுந்தேன்.
என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த
ஒட்டுமொத்த அனுபவத்தை நம்மால் தனியே படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. எந்த
உரையாசிரியரும் இந்த எல்லா விஷயங்களையும் தன் உரைக்குள் கொண்டுவந்துவிட முடியாது. இந்த
முகாமின் வெற்றியே இதுதான் என்று நினைக்கிறேன்.
நான் மேலே குறிப்பிட்ட எல்லாம்
கம்பராமயாணத்தின் மீதான அமர்வுகளில் பேசப்பட்ட விஷயங்களில் ஒரு துளி. கிட்டத்தட்ட
ஒன்றரை நாள் பொழுதில் இன்னும் எவ்வளவு விஷயங்கள் பேசப்பட்டிருக்கும் / பகிர்ந்து
கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் extrapolate செய்து
பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில்
ஒன்றைத் தாய்மொழியிலேயே கற்பதற்கான வாய்ப்பு நமக்கு இருப்பதாக ஜெமோ குறிப்பிடுவதை
நாஞ்சில் நாடன் நினைவு கூர்ந்தார். ஒரு தேர்ந்த வாசகனாக விரும்பும் எவரும் இதிகாசங்களைப்
படித்தாக வேண்டும் என்று நினைக்கிறேன். கம்பராமாயணத்திற்குள் போவதற்கு இந்த
அமர்வுகள் அங்கு வந்திருந்த அனைவருக்கும் பேருதவியாக இருந்திருக்கும் என்றே
நம்புகிறேன்.
*
கு. அழகிரிசாமியின் படைப்புகள் பற்றி
விரிவாக அலசப்பட்டது. வெள்ளந்தியாக (innocent)
இருந்ததால் வாழ்க்கை பற்றிய நேர்மறையான அணுகுமுறை அவரிடம் இருந்ததும் அவருடைய
கதைகளில் அது தென்படுவது குறித்தும் பேசப்பட்டது. அவருடைய சமகாலத்தவரான
புதுமைப்பித்தனின் கதைகளில் காணப்படும் எதிர்மறை அணுகுமுறை அழகிரிசாமியின்
அணுகுமுறையோடு ஒப்பிடப்பட்டது.
ஒரு வரியில் பல விஷயங்களைக் கடந்து
செல்லும் புதுமைப்பித்தனின் மேதாவிலாசம்
சிலாகிக்கப்பட்டது. இந்த இடத்தில் ‘புள்ளின்
வாய் கீண்டானை’ என்ற ஆண்டாள்
பாசுரத்தை நாஞ்சில் நாடன் நினைவு கூர்ந்தார். ‘அது எந்தப் புள், அதை ஏன் வதைத்தான் என்று ஆராய்ந்தால் அது ஒரு பெரிய கதை.
ஆனால் அதை ஆண்டாள் மூன்றே வார்த்தைகளில்
கடந்து செல்கிறாள்’ என்றார்.
லாசராவின் எழுத்துகள் குறித்து நீண்ட
விவாதம் நடைபெற்றது. அடிப்படையான விஷயம் காமம். அதை ஒரு உன்னத நிலைக்கு அவர் தன்
மொழி மூலம் எடுத்துச் செல்கிறார் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அவருடைய கதைகள்
கிட்டத்தட்ட எல்லாமே ஒரே கதை போல உள்ளன என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அபிதா
நாவல் குறித்து நான் எழுதிய கட்டுரையை ஒட்டி ஜடாயு நீண்ட உரையாற்றினார். இது
போன்றதொரு அமர்வில் என் கட்டுரையை ஒட்டி ஒருவர் பேசியதைப் பெரிய கவுரவமாக
எண்ணுகிறேன்.
மற்ற எழுத்தாளர்கள் போல் எழுதுபவர்கள்
நிறைய பேர் வந்துவிட்டாலும் லாசராவை இன்னும் யாரும் imitate செய்து எழுதிவிடவில்லை என்று நாஞ்சில் நாடன் கூறினார். பெரிய அளவில் சாக்த
வழிபாடு நடக்கும் கேரளாவில் இருந்து கூட லாசரா பாணியில் யாரும் எழுதிவிடவில்லை
என்பது கொஞ்சம் ஆச்சரியம் அளித்தது. அவருடைய எழுத்துகளில் கலாச்சார, சமூக, காலப்
பிரக்ஞைகள் ஆகியவை இல்லாததை லாசராவின் வரம்புகளாக ஜடாயு கூறினார்.
தி. ஜானகிராமனின் மோக முள் குறித்து
நீண்டதொரு விவாதம் நடைபெற்றது. யமுனாக்கள் இருக்கிறார்களா, பாபுக்கள்
இருக்கிறார்களா என்ற கேள்வி வந்தபோது ‘இதை ஒரு நவீனத்துவ அணுகுமுறையுடன படிக்க முடியாது’ என்று மோகனரங்கன் கூறினார். நாவல்களில் தி.ஜா.
காட்டுவது ஒரு விடலைப் பருவ உலகம் என்றும் சிறுகதைகளில் அதைத் தாண்டிய பலவற்றைக்
காட்டி இருப்பதாகவும் கூறப்பட்ட கருத்து பெருமளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அம்மா
வந்தாள், செம்பருத்தி, மரப்பசு, நளபாகம் நாவல்களும் பெரிய அளவில்
விவாதிக்கப்பட்டன.
பதின்ம வயதில் இந்த நாவலைப் படித்த அன்பர்
ஒருவர் தான் காணும் பெண்களில் எல்லாம் யமுனாவைப் பார்த்ததாகக் குறிப்பிட்டார்! நாவலைப்
படித்த அனைவரும் ஒன்று யமுனாவைப் பார்த்திருக்கிறார்கள் அல்லது யமுனாவைத்
தேடியிருக்கிறார்கள். (“யமுனா என்ற
பெயர் கொண்ட பெண்ணையாவது பார்த்துவிட மாட்டோமா? எனப் பைத்தியமாய் திரிந்த காலம் அது” – இளம் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்). இந்த நாவலின் வெற்றியே இதில்தான்
அடங்கியுள்ளது என்று நினைக்கிறேன்.
கம்பராமாயணம் மீதான அமர்வுகள் குறித்துச்
சொன்னதையே இங்கும் சொல்கிறேன். இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள் குறித்தான
அமர்வுகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் மிகச் சிலவற்றையே இங்கே எழுதியிருக்கிறேன்.
*
முகாமின் மற்றொரு சிறப்பம்சம் காலை மாலை
நடைகளும் அப்போது நடைபெறும் விவாதங்களும். சிலிகான் செல்ஃப் தளத்தின் ஆர்வி ஜெமோ
பற்றிக் குறிப்பிடும்போது, ‘அவரைப்
போன்ற விஷயம் தெரிந்த நன்கு பேசக் கூடிய ஆள்கள் மிகக் குறைவு’ என்று குறிப்பிடுகிறார். அது எவ்வளவு உண்மை என்பதை
நேர்ப்பேச்சில் நாமே கண்டறியலாம். வரலாறு, சிற்பம், புவியியல், நாவல் கோட்பாடு, கவிதை,
இதிகாசங்கள், தனிப்பட்ட அனுபவங்கள், தத்துவம், மானுடவியல், சூழியல், திரைப்படம்
என்று நீர் கண்ட இடமெல்லாம் வேர் பாய்வது போல விவாதங்கள் பல கோணங்களிலும் இருந்தன.
நேற்றைய காலை நடையின் போது விவாதித்த வாத்தின் கண்ணின் அமைப்பு, தக்கையின் மீது
நான்கு கண்கள் குறுநாவல், கும்பகோணத்தில் நடந்த வங்கி மோசடி, மீனின் தலைக்கு
இருக்கும் ருசி, மகாபாரதம் பற்றிய சில விஷயங்கள் நெடு நாள்களுக்கு எனக்கு
மறக்காது.
ஒவ்வொரு அமர்வின் ஆரம்பத்திலும் இரவு
உணவிற்குப் பின்னும் ராமச்சந்திர சர்மா, சுரேஷ் ஆகியோரின் சங்கீதம் காதுகளுக்கு விருந்தளித்தன.
சுரேஷ் பலகுரல்களில் பேசியும் அசத்தினார்.
இந்த நான்கு நாள்களில் மிக மிக
மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்திருக்கிறேன். அதற்கு எத்தனை பேருக்கு நன்றி
கூறுவதென்று தெரியவில்லை. ஒருவிதத்தில் எல்லோருக்குமே சொல்லியாக வேண்டும். ஏதோ
ஒருவிதத்தில் இந்த நிகழ்விற்குப் பலமாக இருந்திருக்கின்றனர். அனைவர்க்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஊட்டியின் தட்பவெட்பம், ஆஸ்ரமம்
அமைந்திருக்கும் சூழல், உணவு, இவையெல்லாம் இந்த முகாமின் வெற்றிக்குப் பல
விதங்களில் உதவி இருக்கின்றன. இரண்டரை நாள் தீவிரமான இலக்கிய முகாமிற்கு இது போன்ற
சூழல் மிக அவசியம். இப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பகலில் மிதமான வெப்பம்,
நள்ளிரவில் குளிர், நடைபயிற்சி மேற்கொள்ளப் பச்சைப் பசேல் பிரதேசங்கள், ஒரு பெரிய
ஹால், சுற்றிலும் புத்தகங்கள், மிதமானதும் balanced ஆனதும்,
தூக்கம் வரவழைக்காதுமான உணவு, சுற்றிலும் இலக்கியம் பேசும் அன்பர்கள்.
குறைகள் ஏதுமில்லையா என்று உங்களுக்குக்
கேட்கத் தோன்றும். விஷ்ணுபுரம் நாவலைப் படிக்க ஆரம்பித்தபோது என்னை அவ்வளவாகக்
கவராத சில அம்சங்களை எழுதி வைத்திருந்தேன். போகப்போக நாவல் என்னை உள்ளிழுத்துக்
கொண்டது. ஒரு கட்டத்தில் அடுத்து என்ன என்பதிலேயே கவனம் இருந்தது. முதலில் என்னைக்
கவராத பகுதிகள் என்று நான் எழுதி வைத்திருந்தவை எனக்கே அபத்தமாகப் பட்டன. நீக்கிவிட்டேன்.
இதில் விசேஷம் என்னவென்றால் நாவலிலும் கிட்டத்தட்ட இது போல ஒரு கட்டம் வருகிறது!
சபை அவனையும் (அஜிதன்) பவதத்தரையும்
மாறிமாறிப் பார்த்தபடி அமர்ந்திருந்தது. விவாதிக்கும் மனநிலை மங்கி,
எதிர்பார்ப்பும் உத்வேகமும் மட்டுமே மிஞ்சியிருந்தது (பக்கம் 625, திருத்திய
இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2000).
முகாம் குறித்த என் நிலைப்பாடும் அதுவே.
குறைகள் என்று நான் எண்ணியவை எனக்கே அபத்தமாகப் படுகின்றன!
*
எழுத்துகள் வாலியைப் போல வரம் வாங்கி
வந்தவை என்று நான் திடமாக நம்புகிறேன். நம் பலத்தில் எப்போதுமே பாதியை எடுத்துக்
கொள்பவை. தனியாகப் படித்து இலக்கியத்தைப் புரிந்து கொண்டுவிடுவோம் என்பது
சாத்தியமில்லாத ஒன்று. குறைந்தபட்சம் நம் புரிதல் சரிதானா, இன்னும் புரிந்துகொள்ள
இதில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகவாது விவாதங்கள் தேவைப்படுகின்றன.
இது போன்ற முகாம்கள் அவ்விவாதங்கள் நடைபெற உதவுகின்றன. தொடர்ச்சியாக இந்த முகாமை
நடத்திவரும் ஜெமொவிற்கு / விஷ்ணுபுரம் வாசகர் வட்ட அன்பர்களுக்குச் சிரம் தாழ்ந்த
வணக்கங்கள். எனக்கும் இதில் பங்கு கொள்ள வாய்ப்பு கொடுத்ததை ஒரு பெரிய கௌரவமாக
எண்ணுகிறேன்.
சுவாமி வியாஸ பிரசாத் துவக்க உரையாற்றுகிறார்
மாலை நடைக்கு இடையில் அமர்ந்து பேசியபோது
மாலை நடைக்கு இடையில்அமர்ந்து பேசியபோது
ராமச்சந்திர சர்மா பாடுகிறார்


































